பச்சிமோஸ்தாசனம்
பஸ்ஸிமோத்தா என்ற வடசொல்லுக்கு மேற்குத் திசை நோக்கி எழுதல் என்று பொருள். இந்த ஆசனமானது பாலுணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதால் இதற்கு பிரம்மச்சரிய ஆசனம் என்ற பெயரும் உண்டு. முரட்டுத் தனம் இல்லாமல் மெதுவாக இந்த ஆசனத்தைப் பயின்று வந்தால் முழுப்பலனை அடையலாம்.
செய்முறை
1. முதலில் விரிப்பின் மீது கால்களை நீட்டி தலை முதுகு எல்லாம் நேரே இருப்பது போல நிமிர்ந்து உட்காரவும். முழங்கால் இரண்டும் இணைந்தாற் போல் இருக்க வேண்டும். பிறகு, பின்புறமாக மல்லாந்து தரையில் படுக்கவும்.
2. இரு கைகளையும் காதுகளையும் ஒட்டியவாறு தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ளவும்.
3. மூச்சை இழுத்து கைகளை எழுப்பி ஒரே மூச்சில் உட்காரும் நிலைக்கு வரவும்.
4. இந்த நிலையிலிருந்து மூச்சை வெளியிட்டு முன்புறமாகக் குனிந்து இடது கையால் இடது கால் பெருவிரலையும் வலது கையால் வலது கால் கட்டை விரல்களைப் பற்றி அவற்றை இழுக்கும் பாவனையில் முழங்காலை வளைக்காமல் முகத்தை முழங்கால்களின் மீது புதைக்கவும்.
5. பின்பு மெல்ல மூச்சை இழுத்தபடி குனிந்த முகத்தைத் தூக்கி படுக்கை நிலைக்கு வர வேண்டும்.
6. இப்படியே சில நிமிடங்கள் வரை எத்தனை தடவை செய்ய முடியுமோ அத்தனை முறை செய்யலாம். ஆரம்ப காலத்தில் கட்டை விரல்களைத் தொடுவதே சிரமமாக இருக்கும். அதற்காகச் சோர்ந்து போகாமல் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தால் விரைவில் இது எளிதாகி விடும். ஹடயோக ஆசனங்களில் இதுதான் முதல் தரமான பயிற்சி என்று ஆசன வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
பலன்கள்
1. நீரிழிவு எனும் சர்க்கரை நோய் வராது தடுக்கும்.
2. இடுப்பு வலி, மூட்டு வலி, முதுகு வலி போகும்.
3. இடுப்புக்கு வலுவூட்டி ஊளைச்சதையைக் குறைக்கும். இடுப்பு வளைவதால் இடுப்புப் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் செல்லும். அப்பகுதிகள் செழுமை அடையும். வயிற்றுத் தசைகள் மடிவதால் வலியை பெறுகிறது. மலச்சிக்கல் நீங்கும். தொந்தி கரையும.
4. பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலியைப் போக்கும்.
5. சிறுநீரகம் சரிவர வேலை செய்ய இந்த ஆசனம் உதவும்.
6. வயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகளின் மத்த நிலையைப் போக்கி சுறுசுறுப்படையச் செய்யும்.
7. நரம்புத் தளர்ச்சி நீங்கி விடும்.
8. உடலை இளமையாக்கி வன்மை கூட்டும்-.
9. வாத நோய் போக்கி உடம்பை இரும்பு போலாக்கும்.
10. கல்லீரல், மண்ணிரல் பெரியதாவதைத் தடுக்கும்.
11. எளிதாக நெகிழுத்தன்மையில் முதுகெலும்பினை உருவாக்கி இளமையாய் வாழும் இயல்பினை அளிக்கிறது.
0 comments:
Post a Comment